வுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோவில், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் என்ற ஊரில் அமைந்துள்ளது.

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில், உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக – பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் திருப்பெருந்துறை எனப் பெயர் பெற்றது. மக்களால் ஆவுடையார்கோயில் என்று வழங்கப்படுகிறது. அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம்.

மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்த வாதவூரர் (மாணிக்கவாசகர்), மன்னன் உத்தரவுப்படி குதிரை வாங்க இப்பகுதிக்கு (திருப்பெருந்துறை) வருகிறார். அப்போது இங்கு சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்க அங்கு சென்று பார்க்கையில் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசமளிக்கும்படி மாணிக்கவாசகர் கேட்டுக் கொள்ள, குருவும் ஒப்புக் கொண்டார். உபதேசம் கேட்டு சிவநிஷ்டையிலிருந்து கலைந்த மாணிக்கவாசகர் குரு இல்லாதது கண்டு, சிவபெருமான்தான் குருவாக வந்தது என்று தெரிந்து கொண்டு உள்ளம் உருகி பாடினார். குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தில் ஆத்மநாதசுவாமி கோவிலைக் கட்டி சிவதொண்டில் ஈடுபடலானார்.

குதிரை வராத செய்தி கேட்டு மன்னன் மாணிக்கவாசகரை பிடித்து சிறையில் அடைத்தார். ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும் என்று சொல்லச் செய்த பெருமான் அவ்வாறே நரிகளைப் பரிகளாக்கி அவரே ஓட்டிக் கொண்டு மதுரை வந்து மன்னனிடம் ஒப்படைத்தார். அவ்வாறு செய்த இடம் நரிக்குடி என்று இன்று வழங்குகிறது. ஆனால் இரவிலேயே குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக, மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி தண்டிக்க, வைகையில் வெள்ளம் வந்தது. கரையை அடைக்க சிவபெருமான், “கூலியாளாக வந்து பிட்டு வாங்கி தின்று விட்டு வேலை செய்யாததால், பிரம்படி வாங்க அந்த அடி எல்லோர் முதுகிலும் விழ”, வந்தது இறைவன் என்பதைத் தெரிந்து கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான். இந்த சிறப்பு வாய்ந்த திருவிளையாடற் புராண கதை நிகழ காரணமானது இக்கோவில் ஆகும்.

“ஆத்மாவுக்கு நாதராய்” விளங்குவதால் இவர் ஆத்மநாதர் எனப்படுகிறார். அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள சிவலிங்கத் திருமேனி பாணம், சக்தி பீடம், பிரம்ம பீடம் என மூன்று பகுதிகளாக விளங்கும். ஆனால் இங்கு நடுவில் உள்ள சக்தி பீடம் பகுதி மட்டுமே உள்ளது. அதற்கு மேலே குவளை ஒன்று சாத்தியிருப்பார்கள். அதாவது சக்தி பீடத்தில் அறிவொளியாக ஆத்மநாதர் விளங்குகிறார். அதாவது உருவம் இல்லாத அருவமாக இறைவன் விளங்குகிறார். சக்தி பிம்பம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால் சக்தியே பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது என்பது தத்துவம் ஆகும். ஆவுடையார்க்குப் பின்புறச் சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும் அதற்கு மேல் சூரிய, சந்திர, அக்கினி என்ற மூன்று தீபங்களும் (வெள்ளை, பச்சை, சிவப்பு) சுடர்விடுகின்றன.

ஆத்மநாத சுவாமியின் கருவறைக்கு வடமேற்கில் முதல் பிரகாரத்தில் யோகாம்பிகை சந்நிதி உள்ளது. இக்கோவிலின் உள்ளே யோகபீடமும் அதன்மேல் அம்பிகையின் பாதங்களும் உள்ளன. அம்பிகை அரூபமாக இருப்பதால் அம்பிகைக்கு திருவுருவம் இல்லை. 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் – யோகாம்பாளின் திருவடிகள் மட்டுமே தங்கத்தாலான யந்திர வடிவமாக உள்ளன. முன்புறமுள்ள கருங்கல் பலகணி (கல் ஜன்னல்) வழியாக தரிசனம் செய்யவேண்டும். இக்கோவிலை வலம்வரப் பிரகார அமைப்பு இருக்கிறது.

சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும், சில மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குருமூர்த்தமாக அமைந்த இத்திருக்கோவில் தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன்; சிவலிங்கபாண வடிவில் அருவுருவாகக் காட்சிதர, இக்கோவிலில் மட்டும் குருந்தம் மேவிய குருபரனான ஆத்மநாதர் “அருவமாக” இருந்து சித்தத்தைச் சிவமாக்கும் சித்தினைச் செய்தருளுகின்றார். கோவிலைச் சுற்றி தேரோடும் நான்கு வீதிகள் அழகுற அமைந்துள்ளன. கோவிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன.

திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளுன் 20 பகுதிகள் (சிவபுராணம், திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தனைப்பத்து, குழைத்தபத்து, உயிருண்ணிப்பத்து, பாண்டிப்பதிகம், திருவேசறவு, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாயநான்மறை) இத்தலத்தில் பாடப்பெற்றவை.

இத்தலத்தில் 24 தீர்த்தங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவை – அக்கினி தீர்த்தம், ஆத்ம கூபம், வேத தீர்த்தம், நாராயண தீர்த்தம், தேவ தீர்த்தம், வாயு தீர்த்தம், மானவ தீர்த்தம், காலாக்னிருத்ர தீர்த்தம், ரிஷி தீர்த்தம், ஆசுர தீர்த்தம், காந்தர்வ தீர்த்தம், இந்திர தீர்த்தம், பராசர தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர வாவி, வைதிக தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சரஸ்வதி கூபம், பக்த தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், கௌதம தீர்த்தம், தொண்டர் குழி, கீழ் நீர், சுவேதநதி என்னும் வௌ¢ளாறு என்பவாகும்.

இந்த சிவதலத்தில் வழிபடுவோர்க்கு குருபலன் கூடும். மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இந்த தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த ஞானம் பெற்றவராகத் திகழ்வர்.