தோஹா: கத்தார் நாட்டில் நடந்துவரும் உலக தடகள சாம்பியன்ஷிப் 3000 மீட்டர் தடை ஓட்டத்தில், இந்தியாவின் அவினாஷ் சேபில் புதிய தேசிய சாதனைப் படைத்ததோடு, 2020ம் ஆண்டின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றார்.

அவினாஷ் ஏற்கனவே மூன்றுமுறை தேசிய சாதனைகளைப் படைத்திருந்தார். தற்போது கடந்த 1981ம் ஆண்டிலிருந்து முறியடிக்கப்படாமல் இருந்த தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

உலகச் சாம்பியன்ஷிப் 3000 மீட்டர் தடை ஓட்ட இறுதியில் இவர் எடுத்துக்கொண்ட நேரம் 8:21.37. இதன்மூலம் அவர் 13வது இடம்பெற்றார். இந்த இறுதிப்போட்டிக்கு முன்னதாக அவர் கூறியது என்னவெனில், எப்படியேனும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற வேண்டும் என்பதே எனது இலக்கு என்பதே.

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் 8:22.00. ஆனால், 8.21.37 என்ற காலஅளவிலேயே இவர் இலக்கை எட்டி தனது கனவை நனவாக்கிக் கொண்டார்.

இவர் இந்திய ராணுவத்தில் ஹவில்தார் பணியில் இருக்கிறார். சியாச்சின் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் பணிபுரிந்துள்ளார். இவரின் முதல் தேசிய சாதனை நேரம் 8:49.25. இரண்டாவது சாதனை நேரம் 8:28.94. மூன்றாவது சாதனை நேரம் 8:25.33. தற்போது நான்காவது தேசிய சாதனை மற்றும் ஒலிம்பிக்கிற்கான தகுதி நேரம் 8:21.37.