மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், அவனியாபுரத்தை சுற்றி உள்ள 10 மதுபான கடைகளை நாளை ஒருநாள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொங்கலையொட்டி, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான மதுரையில் நாளை போட்டிகள் தொடங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் மதுரையி ல் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகின்றன. அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் பெற்றதாகும்.
தை முதல் நாளான நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. நாளை மறுதினம் பாலமேட்டிலும் புதன்கிழமை அன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதை ஒட்டி நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை சுற்றி உள்ள 10 மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். நாளை மறுதினம் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டின்போது திருவள்ளுவர் தினம் என்பதால் அன்று தமிழ்நாடு முழுவதும் மதுபான கடைகளுக்கு விடுமுறை. புதன்கிழமை அன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில் அலங்காநல்லூரை சுற்றியுள்ள ஏழு மதுபானக்கடைகளை மூடவும் ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு உள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள் புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டுடன் வந்தால் மட்டுமே அனுமதி. காளைகளுடன் வரும் உதவியாளரும் உரிமையாளரும் மது போதையில் இருக்கக்கூடாது. காளையின் மூக்கணாங் கயிற்றை அறுப்பதற்காக உரிமையாளர்கள் கத்தி அல்லது கூர்மையான ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிச்சீட்டு, உரிய மருத்துவ தகுதி சான்று எடுத்துவர வேண்டும். வீரர்கள் மது போதையில் இருக்கக்கூடாது. மீறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். காளைகளின் உரிமையாளர்களும், வீரர்களும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.