118.9 கி.மீ. தூரத்துக்கான சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை மேலும் 93 கி.மீ. அதிகப்படுத்த தேவையான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 2022 நவம்பர் மாதம் விடப்பட்ட டெண்டரில் 8 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.
இதில் தகுதியுள்ள நிறுவனத்திற்கு இதற்கான ஆய்வு செய்ய ஆணை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை இன்னும் மூன்று மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளில் மாதரவம் – சிறுசேரி, லைட் ஹவுஸ் – பூந்தமல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்கள் அமையவுள்ளது.
இதில் மாதவரம் முதல் சிறுசேரி வரை 45.8 கி.மீ. தூரமும், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தூரமும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தூரம் என மொத்தம் 118.9 கி.மீட்டருக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை நகரின் எதிர்கால போக்குவரத்து மற்றும் நகரின் விரிவாக்கத்தை சமாளிக்க இந்த வழித்தடங்களை நீட்டிப்பது மற்றும் புதிய வழித்தடங்களை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது சிறுசேரி வரை அமைக்கப்பட உள்ள வழித்தடத்தை கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் (வண்டலூர்) புதிய பேருந்து நிலையம் வரை 26 கி.மீ. நீடிக்கவும்.
பூந்தமல்லி வரை அமைக்கப்பட உள்ள வழித்தடத்தை பரந்தூர் வரை 50 கி.மீ. நீட்டிக்கவும்.
மற்றும் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் மற்றும் முகப்பேர் வழியாக ஆவடி வரை 17 கி.மீ. தூரம் வழித்தடம் அமைப்பது உள்ளிட்ட மொத்தம் 93 கி.மீ. நீட்டிப்பு குறித்து ஆய்வு செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டது.
இதில் மொத்தம் 8 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தட விரிவாக்க ஆய்வுக்குப் பிறகு 2027 ம் ஆண்டு இதற்கான பணிகள் துவங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பணிகள் துவங்கும் போது இதற்கு மூன்றாம் கட்ட பணிகள் என்று அழைக்கப்படும்.
பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான வழித்தடத்தில் 3.5 கி.மீட்டருக்கு ஒரு ரயில் நிலையம் அமையும் வகையில் லிமிடெட் ஸ்டாப் சர்வீஸாக செயல்படும் என்று தெரிகிறது.
முதல் கட்ட பணிகளில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்ய மேற்கொண்ட ஆய்வுக்கு செலவான தொகையை ஒப்பிடுகையில் இந்த இரண்டாம் கட்ட விரிவாக்க ஆய்வுக்கு குறைந்த தொகையே செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவிர, தற்போது விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை இயங்கிக்கொண்டிருக்கும் வழித்தடத்தை கிளாம்பாக்கம் (வண்டலூர்) வரை 15.3 கி.மீ. தூரம் நீடிக்க மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதற்கான அடுத்தகட்ட பணிகள் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இதுவரை சென்ட்ரல் முதல் மவுண்ட் வரை 22 கி.மீட்டரும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை 32.15 கி.மீட்டர் என மொத்தம் 54.15 கி.மீ. செயல்பாட்டில் உள்ளது.