டில்லி:
இனி கார்களுக்கு நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘தற்போது கார்களுக்கான நம்பர் பிளேட்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. இதில் தற்போது முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கார்களுக்கு இனி தயாரிப்பு நிறுவனங்களே நம்பர் பிளேட்களை பொறுத்தி விடும். பின்னர் எந்திரம் மூலம் நம்பர்கள் பொறிக்கப்படும். இதற்கான கட்டணமும் கார் அடக்க விலையில் சேர்க்கப்படும்.
இதன் மூலம் நுகர்வோருக்கு பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கும். இந்த புதிய தொழில்நுட்பம் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைப்பதோடு மட்டுமின்றி, நாடு முழுவதும் ஒரே சீரான நம்பர் பிளேட்கள் இருக்க உதவும். பாதுகாப்பு அம்சங்களில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை. விலை குறைந்த கார்களில் என்ன பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்படுகிறதோ? அதேபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் தான் சொகுசு மற்றும் எஸ்யூவி கார்களிலும் கடைபிடிக்கப்படும்’’ என்றார்.
2019ம் ஆண்டு ஜூலைக்கு பின்னர் அனைத்து விதமான கார்களிலும் டிரைவர்களின் இருக்கைக்கு ஏர் பேக் வசதி, சீட் பெல்ட் அணிவதை நினைவூட்டும் கருவி, 80 கி.மீ. மேல் வேகம் சென்றால் எச்சரிக்கும் கருவி, விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ரிவர்ஸ் மற்றும் பார்க்கிங்கிற்கு சென்சார் கருவி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.