சென்னை: ஓலா, ஊபர் செயலிகளில் இனி ஆட்டோக்களை இயக்க மாட்டோம் என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.  மேலும் புதிய கட்டணங்களையும் வெளியிட்டு உள்ளனர். இதற்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை செய்துள்ளது.  அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என கூறியுள்ளது.

ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் பலமுறை வலியுறுத்தியும் அதை ஏற்க அரசு மறுத்து வருகிறது. அதுபோல நீதிமன்றமும் ஆட்டோ கட்டணம் குறித்து பரிசீலனை செய்ய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், அரசு, இதுவரை ஆட்டோ கட்டணம் உயர்த்துவது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில்,  ஆட்டோ சங்கங்கள்  கூட்டத்தை சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருந்தன.

அதன்படி புதிய கட்டணம் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருவதாகவும்,   முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ. 50, அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ. 18 என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் இரவு நேரங்களில் பயணித்தால் பகல் நேரத்தைவிட கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு, ஆட்டோ கட்டணம் உயர்த்தக்கூடாது என அறிவுறுத்தி உள்ளதுடன்,  ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று  தெரிவித்திருந்தது. 

இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையர்  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவு அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. சில ஆட்டோ சங்கங்கள் பிப்.1 -ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கவனத்திற்கு வந்ததுள்ளது.

ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம். புகாரின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, ஆட்டோ டிரைவர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜாஹிர் ஹுசைன் தலைமையில் பல்வேறு ஆட்டோ டிரைவர் சங்கங்களின் நிர்வாகிகள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்   செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

அப்போது, “ஆட்டோக்களுக்கு 12 ஆண்டுகளாக கட்டணம் மாற்றி அமைக்காமல் இருக்கிறது. ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு தொடர்ந்து மாற்றி அமைக்காமல் காலதாமதம் ஏற்படுவதால் பயணிகளிடம் வாக்குவாதம், பிரச்சினை ஏற்படுகிறது.

போக்குவரத்து துறை அமைச்சர், போக்குவரத்து ஆணையாளரிடம் ஆலோசனை, புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

சென்னை உயர்நீதிமன்றம் 3 முறை அறிவுறுத்தியும் ஆட்டோ கட்டணம் மாற்ற அரசு முயற்சி செய்யவில்லை.

எனவே ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக புதிய கட்டணம் வரும் வருகிற 1-ந் தேதி முதல் வசூலிக்க திட்டமிட்டுள்ளோம்.

புதிய கட்டணமாக முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.50-ம், கூடுதல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 வசூலிக்க திட்டமிட்டுளோம். அதேபோல் காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ரூ.1.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 கிலோ மீட்டருக்கு ரூ.198 கட்டணம் இருக்கும். அதேபோல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை 50 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும்,   ஓலா, ஊபர் நிறுவனங்களில் ஆட்டோ டிரைவர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. விபத்து உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த நிறுவனங்கள் எந்த இழப்பீடும் வழங்குவதில்லை. எனவே, வருகிற 1-ந் தேதி முதல் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு ஆட்டோக்களை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.

ஓலா, ஊபருக்கு பதிலாக இனி நம்ம யாத்திரி நிறுவனம் மூலம் மட்டுமே வாகனங்களை இயக்க முடிவு செய்துள்ளோம்”

இவ்வாறு ஆட்டோ டிரைவர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.