nall
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெய்வச்செயல்புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
கொள்கை முடிவால் ஏற்பட்ட கூட்டணி மக்கள் நல கூட்டணி. இந்த கூட்டணி இது வரை இல்லாத மாற்றத்தை ஏற்படுத்தும். நாடு விடுதலை பெற்ற 1947–ம் ஆண்டிலிருந்து 1967–ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது. தொடர்ந்து ஒரு வருடம் அண்ணா முதல்வராக இருந்தார். அதனை தொடர்ந்து 48 வருடம் அ.தி.மு.க, தி.மு.க. மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது.
48 கால ஆட்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. தமிழகத்தில் அடிப்படை பிரச்சனை, தண்ணீர் தட்டுபாடு, வேலை இல்லா பிரச்சனை. முற்றிலும் விவசாயம் அழிந்து விட்டது. விவசாயிகள் நிலங்களை விற்று நகரங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர். அ.தி.மு.க.- தி.மு.க. ஊழல் ஆட்சி நடத்தி வருகிறது. ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி மலருவது உறுதி.
தி.மு.க.-அ.தி.மு.க கட்சிகளுக்கு தாதுமணல், கிரானைட் மற்றும் மணல் கொள்ளையில் பங்கு உள்ளது. மதுரை கிரானைட் கொள்ளையில் குளம் மற்றும் அரசு நிலங்கள் காணாமல் போய்விட்டது. இதில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
டாஸ்மாக்கால் தமிழகத்தில் ஒரு கோடி பேர் குடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இளைஞர்கள் 75 லட்சம் பேர் குடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூபாய் 30 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. 5 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் மதுக்கடைகளை மூடக்கோரி பல போராட்டங்கள் நடத்தியும் அவர்கள் நிறுத்தவில்லை. ஆனால் தற்போது படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று கூறுவது ஏமாற்று வேலை.இதனால் இந்த தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.