ramath111
முதல் நாளே மதுவிலக்கை தி.மு.க. நடைமுறைப்படுத்தும் என்றால் பதவியேற்ற நாளிலேயே எப்படி சட்டம் இயற்ற முடியும்? என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது உண்மை தான். அதற்கான பொருள் என்ன? என்பது தான் கலைஞருக்கு நான் எழுப்பும் வினா. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பது எப்போதோ முடிவாகிவிட்ட ஒன்று. ஆனாலும், இந்த வினாவை நான் எழுப்புவதன் நோக்கம் மதுவிலக்கு தொடர்பான விஷயத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நடத்தும் நாடகங்களை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்பது தான். சட்டப்பேரவையில் சட்டம் இயற்றித் தான் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு குறைந்தது 3 மாதங்கள் ஆகும். இதுதான் தி.மு.க.வின் நோக்கம் என்றால், மு.க. ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணத்தின் போது ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கலைஞர் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையில் தான்’’ என்று சென்ற இடங்களில் எல்லாம் வீராவேசமாக முழங்கியது என்ன ஆயிற்று? ஒருவேளை ஸ்டாலின் கூறியபடி முதல் நாளே மதுவிலக்கை தி.மு.க. நடைமுறைப்படுத்தும் என்றால் பதவியேற்ற நாளிலேயே எப்படி சட்டம் இயற்ற முடியும்? என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்க வேண்டும்.
ஏனெனில், தி.மு.க.வின் கடந்த காலம் அப்படி. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக கடந்த 20 ஆண்டுகளில் 5 முறை வாக்குறுதி அளித்து அத்தனை முறையும் அதைக் காற்றில் பறக்கவிட்ட பெருமை தி.மு.க.வுக்கு உண்டு. சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில் வணிகர்களை கைவிட மாட்டோம் என்று கலைஞர் நம்பிக்கையளித்த அடுத்த வாரமே, அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக வாக்களித்து வணிகர்களை படுகுழியில் தள்ளிய பெருமையும் தி.மு.க.வுக்கு உண்டு. அதனால் தான் கலைஞரிடம் விளக்கம் கேட்கிறேன். ஆனால், இந்த வினாக்களுக்கு கலைஞர் பதிலளிக்க மாட்டார். காரணம், அவரிடம் இவற்றுக்கு பதில் இல்லை.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான். இந்த இரு கட்சிகளுமே மதுவிலக்குக்கு எதிரான, மதுவுக்கு ஆதரவான கட்சிகள் தான். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை  அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை  நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 09.04.2016 அன்று ஜெயலலிதா அறிவிக்கும் வரை மது ஆதரவு தான் அதிமுகவின் நிலைப்பாடு. அதேபோல்,  தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 20.07.2015 அன்று கலைஞர் அறிவிக்கும் வரை மது ஆதரவு தான் தி.மு.க.வின் நிலைப்பாடு. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று கடந்த 21.01.2016 அன்று சட்டப்பேரவையில் அறிவித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை  அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எப்படி உறுதி செய்தாரோ? அதேபோல் தான் தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமல்ல என்று 08.03.2015 அன்று செய்தியாளர்களிடம் அறிவித்து தி.மு.க.வின் நிலைப்பாட்டை ஸ்டாலின் உறுதி செய்தார். இதுதான் இந்த கட்சிகளின் உண்மை நிலை. இது ஒருபோதும் மாறாது.