சென்னை,
சென்னையிலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ்கள் இயக்காமல் சும்மா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பஸ்களின் பாகங்கள் உபயோகப்படுத்தப்படால் வீணாகி வருகிறது.
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு தமிழகம் முழுவதும் 24 கிளைகள் உள்ளது. இங்கிருந்து விரைவு பேருந்துகள், சாய்தள விரைவு பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் வெளி மாநிலங்களுக்கு, குறிப்பாக கர்நாடக மாநிலத்துக்கு மட்டும் 50 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை.
ஆனால்,கர்நாடகாவுக்கு (பெங்களுர்) தனியார் ஆம்னி, ‘ஏசி’ பஸ்கள், கன்னியாகுமரியிலிருந்து, மதுரை வழியாக, 102ம், சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக, 72 பஸ்களும் பெங்களூருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், எஸ்.இ.டி.சி., சார்பில் எந்தவொரு, பஸ்சும் பெங்களூருவுக்கு இயக்கப்படுவதில்லை.
தமிழக முக்கிய நகரங்களில் இருந்து, சென்னைக்கு மட்டும், 50 ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவை, சரியான முறையில் பராமரிக்கப்படாததால் பயணிகள் அரசு பஸ்சை விரும்புவதில்லை. இதன் காரணமாக கூட்டம் இன்றி இயக்கப்படுவதால் பெரும் நஷ்டத்தையே சந்திக்கின்றன.
இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் கூறியதாவது, தென் மாவட்டங்களில் இருந்து, பெங்களூரு, திருப்பதி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்கின்றனர். குறிப்பாக, ஐ.டி., துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் பேர் செல்வதால், ஆம்னி பஸ்கள், அவர்களை தங்கள் பக்கம் இழுக்க, இந்த நகரங்களுக்கு, ஏசி பஸ்களை அதிகம் இயக்குகின்றன.
பெங்களூரு, திருப்பதிக்கு, எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்கப்பட்ட போதும், ஏசி பஸ்கள் இயக்கப்படவில்லை. அந்த வகை பஸ்களை இயக்கினால், ஆம்னி பஸ்களின் வருவாய் சரியும். ஆனால் அதிகாரிகள் அதை விரும்புவதில்லை.
ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் அதிகாரிகளை கவனித்து விடுவதால், அதிகாரிகள் அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை. இதனால் பயணிகள், அதிக கட்டணம் செலுத்தி, ஆம்னி பஸ்களில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
தமிழகத்தில், போதிய வருவாய் இன்றி இயக்கப்படும் ஏசி பஸ்களை, பெங்களூரு, திருப்பதி மார்க்கத்தில் இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தமிழக விரைவு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இருந்து மீளும்.. அதிகாரிகளின் அலட்சியத்தாலே போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று குற்றம் சாட்டினர்.
மேலும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் ஏசி பஸ்களை பாருங்கள். எவ்வளவு அழகாக வடிவமைத்தும், வசதிகள் செய்தும் தினசரி சென்னைக்கு வந்து செல்கிறது. அதை முறைப்படுத்துபவர்களும் அதிகாரிகள்தானே..
இவ்வாறு அவர்கள் கூறினர்.