கான்பெரா: ஐபிஎல் தொடர் என்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ தொடர்களின் ஒரு பகுதி அல்ல. எனவே, ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களின் சொந்த செலவில் விமானம் மூலம் வரலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மே 15ஆம் தேதிவரை இந்தியாவிலிருந்து எந்தப் பயணிகள் விமானம் வருவதற்கும் ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது.
தற்போது, ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், கம்மின்ஸ், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட 14 முன்னாள் & இந்நாள் வீரர்கள் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர மேத்யூ ஹேடன், பிரட் லீ, மைக்கேல் ஸ்லாடர், லிசா ஸ்தாலேகர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களும் உள்ளனர்.
இதற்கிடையே, ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர் ஆகியோரின் பயணத் திட்டம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரித்துள்ளது. அப்போது, ஐபிஎல் தொடர் முடியும் வரை இந்தியாவில்தான் இருப்போம் என வாரியத்திடம் வீரர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், தற்போது மிகவும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில் மக்களைச் சிறிதளவு மகிழ்ச்சிப்படுத்த எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு ஐபிஎல் மட்டும்தான் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸனிடம், அரசு சார்பில் வீரர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்படுமா? என்று நிருபர்கள் இன்று கேட்டனர். இதற்கு அவர் பதிலளிக்கையில், “ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.
ஆஸ்திரேலிய தொடரின் ஒரு பகுதியாக, ஐபிஎல் தொடர் இல்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்தச் செலவில் சென்றுள்ளதால், அவர்களின் சொந்தப் பணத்தைப் பயன்படுத்திதான் வர வேண்டும். அவர்கள் தாயகம் திரும்ப வேண்டுமானால் விமானத்தைத் தனியாக அமர்த்திக் கொண்டு, சொந்தச் செலவில் நாடு திரும்பலாம்” எனத் தெரிவித்தார்.