நியூசிலாந்து:
நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற 2022 ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. அந்த அணி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் வெல்லும் ஏழாவது சாம்பியன் பட்டம் இது.

கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் முறையில் முதல் சுற்று நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. 2017 எடிஷனை வென்ற இங்கிலாந்து அணி கடைசி நான்கு போட்டிகளை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியும், இங்கிலாந்து – தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

கிறைஸ்ட்சர்ச்சில் (Christchurch) நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 356 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்காக அதிகபட்சமாக அலீசா ஹீலி 170 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை இங்கிலாந்து விரட்டியது.

அந்த அணிக்காக டாப் ஆர்டரில் பேட் செய்யக்கூடிய ஐந்து வீராங்கனைகளில் 4 பேர் விரைவாக அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இருந்தும் நேட் ஷிவர் எனும் ஒற்றை வீராங்கனை கடைசி வரை அவுட்டாகாமல் 148 ரன்களை சேர்த்தார். 43.4 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆள் அவுட்டானது இங்கிலாந்து. இதன் மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

கடந்த 1973 முதல் நடத்தப்பட்டு வரும் இந்த மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா. மொத்தம் 12 எடிஷன்கள் நடந்துள்ளன. இங்கிலாந்து அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நியூசிலாந்து அணி ஒரு முறை கோப்பை வென்றுள்ளது.