டில்லி:

குருமூர்த்தி 72மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி டிவிட் பதிவிட வேண்டும் என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் துக்ளக் குருமூர்த்தி  டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

டில்லி உயர்நீதி மன்ற நீதிபதியை அவமதிக்‍கும் வகையில் டிவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டது தொடர்பாக துக்ளக் ஆசிரியரான  ஆடிட்டர் குருமூர்த்தி மீது, டில்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் குரூமூர்த்தி சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

துக்ளக் ஆசிரியரும், ரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்‍குநருமான ஆடிட்டர் குருமூர்த்தி, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் குறித்து டிவிட்டரில் சில தகவல்களை பதிவிட்டார். அதில், பீமா கொரேகான் ( Bhima Koregaon)  வழக்‍கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் கவுதம் நவ்லாக்‍காவை மகாராஷ்டிர மாநிலத்திற்கு மாற்றக்‍கோரிய அம்மாநில காவல் துறையினரின் மனுவை நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. பின்னர், வீட்டுக்‍காவலில் வைக்‍கப்பட்டிருந்த நவ்லாக்‍காவை இதே அமர்வு விடுவித்தது.

இந்த விவகாரத்தில்,  நீதிபதி முரளிதருக்‍கும், சமூக ஆர்வலர் நவ்லாக்‍காவுக்‍கும் ஏற்கெனவே தொடர்பு இருப்பதாகவும், இதன் காரணமாகவே இந்த வழக்‍கில் ஒருதலைபட்சமாக நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் குருமூர்த்தி தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

குருமூர்த்தியின் இந்த செயல்,  நீதிமன்றத்தின் மாண்புகளை சிதைக்‍கும் வகையிலும், நீதிக்‍கு தடையாக செயல்பட்ட தாகவும் கூறி, டில்லி உயர்நீதிமன்றம் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணையின்போது, குருமூர்த்திக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, வழக்கில் இருந்து  விலக்கு வேண்டுமென்றால், நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

வழக்கின் இன்றைய விசாரணையின்போது, குருமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, இந்த டிவிட் தொடர்பாக குருமூர்த்தி மன்னிப்பு கோரியுள்ளார், என்றும், தனது மறுப்பு தொடர்பாக குருமூர்த்தி மன்னிப்பு கேட்டு டிவிட் செய்வார் என்றும், அதன் லிங்கை அனுப்பி வைப்பதார் என்றும் கூறினார்.

இதையமுத்த உத்தரரவிட்ட நீதிபதிகள், குருமூர்த்தி தனது நிபந்தனையற்ற மன்னிப்பை 72 மணி நேரத்துக்குள் டிவிட்டரில் வெளியிட வேண்டும் என்றும், தனது முந்தைய ட்வீட்டை வாபஸ் வாங்கிக் கொள்வதாக டிவீட் செய்யவேண்டும் என்றும் டில்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.