சென்னை:
தேனி பகுதியில் உள்ள குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளது குறித்து தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் இன்று தனது விசாரணையை தொடங்குகிறது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயற்சிக்கு சென்ற பலர் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள் ளநிலையில், 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் மேலும் 8 பேர் பலியானதை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
நாடு முழுவதும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ள சம்பவம் குறித்து விசாரணை நடத்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ராவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டருந்தது.
அதன்படி, இந்தக் கோரச் சம்பவம் குறித்த விசாரணை இன்று தொடங்குகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ரா இன்று தன் விசாரணையை தேனியில் தொடங்குகிறார்.
விசாரணை அறிக்கையை 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு அவருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.