சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை வியாசர்பாடி பகுதியில் வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கும்போது, மர்ம நபர் கத்தியால் வெட்ட பாய்ந்தார். இதில், என்.ஆர். தனபாலன் அருகே இருந்த நபருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் காரணமாக,  வியாசர்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டம், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக கூட்டணிக் கட்சியான மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை எம்.கே.பி நகர், வியாசர்பாடி பகுதிகளில் ஆதரவாளர்களுடன் நடந்து சென்ற  பிரசாரம் மேற்கொண்டு வந்தார். வியாசர்பாடி, உதயசூரியன் நகர் பகுதியில் அவர் வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டுவந்த போது, மர்மநபர் ஒருவர் திடீரென்று கத்தியுடன் ஓடி வந்து என்.ஆர்.தனபாலனை வெட்ட முயன்றார். ஆனால், தனபாலன் சுதாரித்துக்கொண்ட நிலையில், அவருடன் வந்த அதிமுக நிர்வாகி சிவக்குமாரின் கையில்  கத்திவெட்டு விழுந்தது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கத்தியால் வெட்ட முயன்றவரை பிடிக்க முயற்சித்த நிலையில், அவர் மாயமாக மறைந்துவிட்டார். உடனடியாக என்.ஆர்.தனபாலன் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுகவினர், பெருந்தலைவர் காமராஜர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் அங்கு கூடத் தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கத்திவெட்டால் காயமடைந்த சிவக்குமாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து எம்.கே.பி நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் காயமடைந்த அதிமுக நிர்வாகிகளை என்.ஆர்.தனபாலன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

மாநிலத்தின் தலைநகர் சென்னையில், பட்டப்பகலில் வேட்பாளர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.