டில்லி

கொரோனாவை பரப்புவதாக இஸ்லாமியர்கள், மசூதிகள், அவர்களின் கடைகள் மீது நாடெங்கும் பல இடங்களில் கடந்த சில தினங்களாகத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன

மாதிரி புகைப்படம்

டில்லி நிஜாமுதின் பகுதி மசூதியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்துக் கொண்ட இஸ்லாமியர்களால் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களால் பெருமளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   அங்கு வந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை அவர்களே அறியாமல் இருந்துள்ளனர்.

இதையொட்டி மாநாடு தொடர்புடைய மக்கள் கண்டறியப்பட்டுத் தனிமைப்படுத்தப் படுகின்றனர்.   இஸ்லாமியர்கள் இதனால் அச்சமடைந்து தங்களை பற்றிய விவரங்களை தெரிவிக்க மறுக்கின்றனர்.  பல இடங்களில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு அதிகரித்துள்ளது.  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மசூதிகள், இஸ்லாமியர் கடைகள் ஆகியவையும் தாக்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹால்த்வானி பகுதியில் சில இளைஞர்கள் இஸ்லாமிய பழக்கடைக்காரர்களின்கடைகளை மூடுமாறு மிரட்டி உள்ளனர்.  அவர்கள்  அங்குள்ள இந்துக்களைக் கடைகளை மூட வேண்டாம் எனவும் சொல்லி உள்ளனர்.  இந்த விடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த விடீயோவில் இஸ்லாமிய பழக்கடைக்காரர்கள் கொரோனாவை பரப்புவார்கள் என்பதால் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அந்த இளைஞர் தெரிவிக்கிறார்.

[youtube https://www.youtube.com/watch?v=qpITikHsZPw]

உத்தரகாண்ட் காவல்துறையினர் இது குறித்து ஒரு வழக்குப் பதிந்துள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அரியானா

அரியானாவில் ஜின் மாவட்டத்தில் கடந்த ஞாயிறு அன்று 9 மணிக்குப் பிரதமர் கேட்டுக் கொண்டபடி ஒரு இஸ்லாமியக் குடும்பத்தினர் விளக்கை அணைக்கவில்லை.  இதையொட்டி அருகில் உள்ள இந்துக்கள் அவர்களிடம் சத்தமிட்டுள்ளனர்.  அதன் பிறகு இந்துக்கள் பட்டாசு வெடிப்பதை இஸ்லாமியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஆண்கள் அடுத்த நாள் இந்துக்களால் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.  நால்வருக்கும் தலையில் காயம் உண்டாகி உள்ளது.   இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார், அந்த இஸ்லாமியர்கள் பிரதமரை மதிக்கவில்லை என்பதால் தகராறு நடந்ததாக தெரிவித்துள்ளார்.   அந்த கிராமத் தலைவர் இஸ்லாமியர்களும் விளக்கை அணைத்திருந்தால் தகராற்றை தவிர்த்திருக்கலாம் எனக் கூறி உள்ளார்.   இந்த சம்பவம் தொடர்பாக நால்வர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

அரியானா மாநிலம் குரு கிராம் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் அதே தினத்தன்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.  இதில் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை.   அப்போது மசூதியின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த இமாம் காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளார்.   இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என இன்னும் தெரியவில்லை.

டில்லி

தென் மேற்கு டில்லியில் அலிப்புர் அருகே உள்ள முக்மேல்பூர் என்னும் ஊரில் ஒரு மசூதி தாக்கப்பட்டதாக டில்லி சிறுபான்மையினர் ஆணையம் டில்லி காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளது.  கடந்த 3 ஆம் தேதி மசூதியின் உள்ளே இருந்த 200 பேர் மீது நடந்த இந்த தாக்குதலில் மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு தீவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  ஆனால் டில்லி காவல்துறை அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என மறுத்துள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலம் ஹோசிபூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பால்காரர்கள் இந்துக்களால் தாக்கப்பட்டுள்ளனர்.   மேலும் அவர்களிடம் இருந்து பால் வாங்க இந்துக்கள் மறுத்துள்ளதால் பல பால்காரர்கள் பாலை பியாஸ் நதியில் கொட்டி உள்ளனர்.   அத்துடன் அவர்களை இந்துக்கள் ஒதுக்கி வைப்பதோடு வீட்டை விட்டு வெளியே வர யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இமாசல பிரதேசம்

இமாச்சலப்பிரதேசம் உணா மாவட்டத்தில் ஒரு இஸ்லாமியப் பால்காரர் இந்துக்கள் ஒதுக்கி வைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

கர்நாடகா

கர்நாடகா மாநிலம் பகல்கோட் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியில் மீன் பிடிக்க வந்த இஸ்லாமியர்களை அங்கிருந்த்வரக்ள் விரட்டி அடித்துள்ளனர்.  அதே மாவட்டத்தில் ஒரு மசூதியில் ஏராளமானோர் கூடி தொழுகை நடத்திய போது உள்ளே புகுந்த இந்துக்கள் கொரோனா பரவுவதாகக் கூறி அனைவரையும் தாக்கி உள்ளனர்.

பெளகாவி மாவட்டத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று இரவு 9 மணிக்குப் பிரதமர் வேண்டுகோளை மீறி விளக்கை எரியவிட்டதால் இரு மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.  இந்த நிகழ்வு தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு நேற்று முன் தினம் ஒரு தொண்டு நிறுவனம் உணவு அளித்த போது சிலர் அங்கு வந்து கிரிக்கெட் பேட்டுகளால் தாக்கி உள்ளனர்.   அப்போது தாக்கியவர்கள் தங்களை நிஜாமுதினில் இருந்து வந்து வைரசைப் பரப்புவதற்காக உணவு அளிப்பதாகவும்  உணவில் எச்சில் துப்பி அளிப்பதாகவும் குற்றம் சாட்டியதாக அமைப்பினர் தெரிவித்தனர்.

மங்களூரு நகரின் ஒரு பகுதியில் கொரோனா பரவுதல் முழுமையாக நிற்கும் வரை இஸ்லாமிய வணிகர்கள் அங்கு வரக்கூடாது என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனா பரவுதலுக்கு இஸ்லாமியர்கள் காரணம் என சொல்லக் கூடாது என மாநில மக்களை எச்சரித்துள்ளார்

 

நன்றி : தி குவிண்ட்