சேலம்: வாழப்பாடி அருகே காரில் சென்றுகொண்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ அருள் மீது ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் அன்புமணி ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள அரசியல் மோதல் இன்று கைகலப்பாக மாறி உள்ளது. பாமகவில் அன்புமணியை நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தான் பாமக தலைவர், எனக்கே கட்சியினர் ஆதரவு உள்ளது என தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார் அன்புமணி ராமதாஸ். இதற்கிடையில், பாமக எம்எல்ஏ அருள் ராமதாசுக்கு விசுவாசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் அன்புமணி தரப்புக்கும் அருள் தரப்புக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருளை கட்சியின் இணை பொதுச்செயலாளராக ராமதாஸ் நியமித்தார். இதையடுத்து, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து இரா.அருளை நீக்கிய அன்புமணி அந்த பொறுப்பில் க.சரவணன் என்பவரை நியமனம் செய்தார். இந்நிலையில், இரா. அருளை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கியுள்ளார். இவ்வாறு மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று சேலம் அருகே வாழப்பாடி பகுதியில் காரில் வந்துகொண்டிருந்த பா.ம.க எம்.எல்.ஏ அருள் காரை வழிமறித்து ஒரு கும்பல் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இருதரப்பினர் இடையே கடும் மோதல் வெடித்தது. கட்டை, கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைடுத்து அங்கு போலீசார் அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தாக்குதல் அன்புமணி ஆதரவாளர்களால் நடத்தப்பட்டது என்றும், தன்னை கொல்ல சதி என்றும் பாமக எம்எல்ஏ அருள் குற்றம் சாட்டி உள்ளார். துக்க வீட்டில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது சோளக்காட்டிற்குள் மறைந்திருந்தவர்கள் காரை நிறுத்தி எங்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். என்னை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதில் 6 கார்கள் சேதமடைந்தது. அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். அன்புமணியின் டீசண்ட் அண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ் இதுதானா?” என்று கேள்வி எழுப்பினார்.