திருவாரூர்: திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனன் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகர் மதுசூதனன் மீது மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே பாஜக விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ஜெகதீசன், அவரது கூட்டளி சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பாஸ்கர் கைத செய்யப்பட்டு உள்ளார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மது என்ற மதுசூதனன். இவர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய தலைவர் பொறுப்பில் இருந்தவர். இந்த சூழலில் இவர் வழக்கம்போல் நேற்றைய முன்தினம் (மே 8) இரவு தனது வீட்டில் இருக்கும்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் மதுசூதனனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். படுகாயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்திலரசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட பாஜக மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் ஜெகதீசன் மற்றும் அவரது கூட்டாளி சரவணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்த போலிஸார் குடவாசல் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.