விழுப்புரம்: மணல் கொள்ளையனை பிடிக்கச் சென்ற போலீஸ் எஸ்.ஐ மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த அடாவடி சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.
விழுப்புரத்தில் மணல் கொள்ளையனை கைது செய்ய சென்ற போலீஸ் உதவி காவல் ஆய்வாளர், வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு, அவர்மீது கொலை முயற்சி நடந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் குணசேகர். இவர் தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த பிடாகம் குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (வயது 31) என்பவரை கைது செய்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால் வெளியே போலீஸ் இருப்பதை அறிந்து கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்ட சுதாகர் வெளியே வர மறுத்துள்ளார்.
தலைமறைவாக இருக்கும் சுதாகர் விசாரணைக்கு வெளியே வரவில்லை என்றால் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே வருவேன் என எஸ் ஐ குணசேகர் எச்சரித்துள்ளார். இதையடுத்து வீட்டிலிருந்து சுதாகர், அவரது தம்பி பாலாஜி (வயது 28) சுதாகரின் மனைவி பிரபாவதி (வயது 26), சுதாகரின் தந்தை தட்சிணாமூர்த்தி (வயது 65) மற்றும் அவரது தாய் தமிழரசி (வயது 60) ஆகிய 5 பேரும் கும்பலாக வீட்டில் இருந்து வெளியே வந்து அருகில் இருந்த திருப்புளியை கொண்டு காவல் உதவி ஆய்வாளரான குணசேகரனை வீட்டுக்குள் அடைத்து வைத்து, அவரை கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும், அவர்மீது ஸ்குரு டிரைவர் மூலம் குத்தி உள்ளனர். இதில், அவரது வலது புற கண்ணம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளரை சக போலீசார் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துரள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர், போலீஸ் உதவி ஆய்வாளர் குணசேகர் மீது தாக்குதல் நடத்திய சுதாகர், பாலாஜி, தட்சிணாமூர்த்தி, தமிழரசி ஆகியோரை பிடிக்க சென்றனர். ஆனால், அவர்கள் தலைமறைவான நிலையில் சுதாகரின் மனைவி பிரபாவதி மட்டும் போலீசில் சிக்கினார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் மற்றவர்களை தேடி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 3 தடை படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..