சென்னை:

ன்னியாகுமரி அருகே கடல்பகுதியில் மேலடுக்கு சுழற்றி நிலவுவதால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் பருவமழைத் தொடங்கி உள்ள நிலையில், மாநிலத்தில் சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது  குமரிக்கடல் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பெய்த மழையின் அளவு கடலூர் – 6 செ.மீ., திருச்செந்தூர் – 5 செ.மீ., ஆலங்குடி – 4 செ.மீ. அதிகபட்ச வெப்பநிலையாக 32°செல்சியஸ் இருக்கும். குறைந்தபட்சமாக 25°செல்சியஸ் இருக்கும்.

அடுத்த 24 மணிநேரத்திற்கு, சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது”.

இவ்வாறு தெரிவித்துள்ளது.