சென்னை: தமிழகத்தில்  வளிமண்டல சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்பு உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் பல்வேறு வடதமிழக மாவட்டங்களில் கனமழை கொட்டிதீர்த்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும்  வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளது. இதனால்,  மீண்டும், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் ன்றும்,  தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12  மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி, திண்டுக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலுர், திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இதேபோல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் கடலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்றப் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது.