சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
தமிழ்நாடு வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (செப்டம்பர் 18) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்.
தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (செப்டம்பர் 19ஆம் தேதி) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுதினம் (செப்டபம்பர் 20ஆம் தேதி) தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 21ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 22ஆம் தேதி சேலம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திருவாடானை ( ராமநாதபுரம் ) 12, தொண்டி ( ராமநாதபுரம் ) 11, பெருங்கலூர் ( புதுக்கோட்டை ) 10, கள்ளிக்குடி ( மதுரை ) 9, விராலிமலை (புதுக்கோட்டை) , காரியாபட்டி (விருதுநகர் ) தலா 7, ஆலங்குடி (புதுக்கோட்டை) , மன்னார்குடி ( திருவாரூர்) , பேராவூரணி (தஞ்சாவூர்) தலா 6, ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), ஆரணி (திருவண்ணாமலை ) , காட்டுமன்னார்கோவில் (கடலூர்) , காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), விருதாச்சலம் (கடலூர்) , இலுப்பூர் (புதுக்கோட்டை), தோகைமலை (கரூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), பள்ளிப்பட்டு (திருவள்ளூர் ) தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.