சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 15ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இருந்தாலும் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஒருபுறம் கடுமையான வெயில் கொளுத்தினாலும், மறுப்புறம் வெயிலை தணிக்கும் வகையில் மழையும் பெய்து வருகிறது.
இந்த மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் மிதமான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக,நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை இன்று பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.