சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, மதுரை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும்(ஏப் 04) கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளி மண்டல சுழற்சி காரணமாக நேற்று இரவு முதல் தற்போதுவரை சென்னை உள்பட பல பகுதிகளில திடீர் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து, இதமான சூழல் நிலவுகிறது. ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பம்மல், பெரியமேடு, புரசைவாக்கம், வேப்பேரி, எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அனகாபுத்தூர், தி.நகர், அண்ணா சாலை, சோழிங்கநல்லூர், கோம்பேடு, மாதவரம், பெரம்பூர் மற்றும் புறநகர் பகுதிகளான ரெட்ஹில்ஸ், தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் தென்தமிழகத்தில் சிவகங்கைக்கு உட்பட்ட காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
இந்த நிலையில், இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமழை பல பகுதிகளில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மாநிலத்தின் சென்னை உள்பட 25 மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மிதமானது முதல் கனமமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.