சென்னை,

டிஎம்-ல் பணம் நிரப்ப சென்றபோது, பணம் கொண்டு செல்லும் காரின் ஓட்டுனர் பணத்துடன் தலைமறை வானார்.

நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் நிரப்பச் சென்றபோது, ரூ.28 லட்சத்துடன், பணம் கொண்டு வந்த காரை ஓட்டி வந்த டிரைவர் தலைமறைவானார்.  அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களே அமர்த்தப்பட்டுள்ளது. அதுபோல, ஒரு வங்கி சார்பாக அதன் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப சென்னை   ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

அந்த நிறுவனம் சார்பில் நேற்று சென்னையில்  பல்வேறு இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பிவந்தனர். அதன் இறுதியாக நேற்று, மாலை சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு பணம் நிரப்ப வந்தனர்.

அந்த காரில் ஊரப்பாக்கத்தை சேர்ந்த கருணாகரன், மதுராந்தகத்தைச் சேர்ந்த ராஜ்குமார், காவலர் கியாவூதீன் ஆகியோர் இருந்தனர். காரை டிரைவர் உதயகுமார் என்பவர் ஓட்டிவந்தார்.

கருணாகரன், ராஜ்குமார் ஆகியோர் காரில் இருந்து இறங்கிச் சென்று ஏடிஎம் மையத்தில் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர். காருக்கு அருகே கியாவூதீன் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அப்போது டிரைவர் உதயகுமார் காவலரை பணம் நிரம்பும் ஊழியர்கள் அழைப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து காவலரும் ஏடிஎம் மையம் சென்றார்.

அந்த நேரத்தில் காரினுள்  இருந்த ரூ.28 லட்சம் பணத்தையும், காரையும்  எடுத்துக்கொண்டு டிரைவர்  உதயகுமார் தப்பி ஓடிவிட்டார்.

ஏடிஎம்-ல் பணம் நிரப்பிவிட்டு வந்தவர்கள், கார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து தங்களது நிறுவனத்துக்கும், விமானநிலைய போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.