கடந்த 47 நாட்களாக சயண கோலத்திலும், நின்ற கோலத்திலும் காட்சியளித்த அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்க, குளத்தினை தயார் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் அத்திவரதர், கடந்த ஜூலை 1ம் தேதி அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஜூலை 1ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை சயன கோலத்திலும், அதற்கடுத்து நின்ற கோலத்திலும் தரிசனம் கொடுத்த அத்திவரதர், தொடர்ந்து 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாளித்து வந்தார். அத்திவரதர் வைபவத்தால் கடந்த 46 நாட்களாக காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு அத்திவரதரைத் தரிசித்து வந்தனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நடிகைகள் திரிஷா, நயன்தாரா. பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி என பல முக்கிய நபர்கள், அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

இந்த வைபவத்தின் போது, தமிழக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையிலும், பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், அத்திவரதரைத் தரிசிக்க இன்றே கடைசி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று, அத்திவரதரை தரிசித்தனர். நாளை காலை, சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மீண்டும் அனந்த சரஸ் குளத்திற்குள் அத்திவரதர் வைக்கப்பட உள்ளார்.

அத்திவரதரைத் தரிசிக்கக் கூட்டம் அலைமோதியதால் அவரை நிரந்தரமாக வெளியில் வைக்க வேண்டும் என்றும் தரிசன காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அனந்த சரஸ் குளத்தில் சுத்தமான, சுகாதாரத்துறையால் பரிந்துரைக்கப்பட்ட நீரை நிரப்பி, திங்கட்கிழமை அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இத்தகைய சூழலில், குளத்தை தூர்வாரி, சுத்தமான நீரை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, குளத்தை ஆய்வு செய்து வருவதோடு, அத்திவரதரை குளத்தில் வைக்கும் பணியையும் துரிதப்படுத்தியுள்ளனர்.

2019ம் ஆண்டு ஜூலை 1 முதல் இன்று வரை பொதுமக்களுக்கு அருள்பாளித்த அத்திவரதர், இனி 40 வருடங்கள் கழித்து 2059ம் ஆண்டு தான் வெளியே எடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.