ஈரோடு: அத்திக்கடவு-அவிநாசி திட்ட சோதனை முடிந்ததும் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு, ரங்கம்பாளையத்தில் கூட்டுறவு துறை சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய ரேஷன் கடைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தியூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சுமார் ரூ. 70.06 கோடி மதிப்பிலான நிலத்ததிட்டங்கள், 3,552 மகளிர் குழுவில் உள்ள, 35 ஆயிரத்து, 907 உறுப்பினர்களுக்கான கடன் தள்ளுபடி சான்று வழங்கினார். மேலும், 14 இடங்களில் புதிய ரேஷன் கடை கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஈரோடு மாவட்டத்துக்கு, 85 திட்டங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளார். மாநகரத்துக்குள் சாக்கடை, ரோடு என பல பிரச்னைகள் உள்ளன. அவற்றை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க இயலாது. அவற்றை ஒழுங்கு செய்ய, 1,000 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கி உள்ளார். இதை வழங்கவது, இடைத்தேர்தலால் தாமதம் ஏற்பட்டது. இப்போது அவற்றை துவங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து, அத்திக்கடவு – அவிநாசி திட்டப்பணிகள் விரைவாக முடித்து செயல்பாடு துவங்கப்படும். தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதில் ஆறு ‘பம்பிங் ஸ்டேஷன்’கள் உள்ளன. நான்காவது பம்பிங் ஸ்டேஷன் வரை, சோதனை ஓட்டத்தை முடித்து விட்டனர். இன்னும் இரு பம்பிங் ஸ்டேஷனில் சோதனை ஓட்டம் முடிக்க வேண்டும். அத்துடன், கிளை வாய்க்காலில் சென்று, குளத்தில் சென்று நிரம்பும் பணி, 15 நாட்களுக்குள் சோதனை ஓட்டமாக நிறைவு செய்யப்படும். அதன்பின் முதல்வர், இத்திட்டத்தை திறந்து வைப்பார். இவ்வாறு அமைச்சர் கூறினார். மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட பஞ்., தலைவர் நவமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,657 கோடி மதிப்பில் அத்திக்கடவு – அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது அங்கு திட்ட சோதனை நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் அனைத்து சோதனை ஓட்டங்களும் 15 நாட்களுக்குள் நிறைவுபெறும் என்றும், அது முடிவடைந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைப்பார் என அமைச்சர் குறிப்பிட்டார்.