சென்னை: தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச விவகாரத்தில் ஆதினங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தருமபுரம் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மயிலாடுதுறை தருமபுரம் ஆதின மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டினபிரவேசம் விழாவை நடத்த இந்த ஆண்டு தமிழக அரசு தடை செய்துள்ளது. இது தவறான நடவடிக்கை. ஆதீனத்தில் வசிக்கும் 72 பேர் விருப்பப்படிதான் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதாக கூறுகின்றனர். தோளில் தூக்கிச் செல்வதில் மரியாதை குறைவு ஏதும் கிடையாது. பாரம்பரியமாக நடைபெற்று வரும் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்விற்கான தடையை நீக்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தருமபுர பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக்கொள்ள முடியாது: பிரவேசத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர் சேகர்பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நிகழ்ச்சிக்கு ஆதீனங்கள் அழைக்கப்பட்டு வருகை தந்திருந்தனர். ஒருசிலர் தங்களின் தவறுக்காக பட்டணப் பிரவேச விவகாரத்தை அரசிலாக்கப் பார்க்கின்றனர் என குற்றம் சாட்டியதுடன், தருமபுர பட்டின பிரவேச விவகாரத்தில் தமிழக அரசு நடுநிலையோடு செயல்படும் என்று கூறியதுடன், இதுகுறித்த ஆதீனங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும் என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.
இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆன்மீகத்திற்கு எதிராக கட்சியாக சித்தரிக்க முயற்சி செய்யப்படுவதாகவும், இதுபோன்ற நெருக்கடிகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது என்றும் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.