டில்லி:

நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலை ஒரே சமயத்தில் நாடு முழுவதும் நடத்தலாம் என்றும், அது சாதியமானதே என்று  தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறியுள்ளார்.

மக்களவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனுடன் சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து ஒரே சமயத்தில் நடத்த மத்திய அரசு உத்தேசித்து வருகிறது. இதற்கு நிதிஆயோக்கும் சம்மதம் தெரிவித்து உள்ளது.

காலநேரம் விரயம் மற்றும் அதிக அளவு செலவை கட்டுப்படுத்த பாராளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர்  தேர்தல் கமிஷனுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த தயாராக இருப்பதாக தலைமை தேர்தல்கமி‌ஷன் தெரிவித்து, அதற்கு தேவையான நிதி ஒதுக்க கோரியும் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

2024ம் ஆண்டில் இருந்து மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில், சட்டதிருத்தம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியம் தான் என்று தெரிவித்தார்.

மேலும், அவ்வாறு முடிவு செய்தால், அதற்கு தேவையான  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் வாங்க வேண்டும் என்றார். தற்போது  குறுகிய காலமே இருப்பதால், புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாய்ப்பு இல்லை என்றும், இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதியில், நாடாளுமன்ற, சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்தார்.