சென்னை
பட்டப்பகலில் சென்னை தி நகரில், தன்னை மணக்க மறுத்த பெண்ணை ஒரு வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது 40). கண்ணகி நகரில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் உள்ளவர் சுமதி (வயது40). சுமதி டிப்ளமோ முடித்துள்ள தன் மகளுடன் வசித்து வருகிறார். சுமதி தன் கணவரை விட்டு பிரிந்து 15 வருடங்களாக தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார். சத்திய நாராயணன் சென்னை பாரிமுனையில் பொம்மைகள் மற்றும் பல்பொருள் விற்கும் கடை ஒன்றில் பணி புரிகிறார். இவர் சுமதியின் மகளை மணக்க விரும்பியுள்ளார்.
பலமுறை தனது விருப்பத்தை தெரிவித்தும் தாயும் மகளும் இந்த திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை. சத்யா அடிக்கடி சுமதியின் மகளை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். எரிச்சலடைந்த அந்தப் பெண் இனியும் தொடர்ந்து வந்தால் போலீசில் புகார் செய்வேன் எனவும் பலமுறை மிரட்டியுள்ளார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் சத்யா தொடர்ந்து வந்த படியே இருந்திருக்கிறார்.
நேற்று பகல் தி நகரில் உள்ள ஒரு தெருவில் அந்தப் பெண்ணை சந்தித்த சத்யா, மீண்டும் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். அந்தப் பெண் மறுக்கவே, ஒரு கத்தியை எடுத்து அவரைக் குத்தி உள்ளார். அந்தப் பெண் சத்தம் போடவே, அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூடி விட்டனர். கூட்டத்தை கண்ட சத்யா தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால் அவரை தடுத்த அங்குள்ள மக்கள் போலீசில் ஒப்ப்படைத்தனர்.
காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிருக்கு அபாயம் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.