சென்னை:

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் பிரச்சினை மருத்துவ முறையை மட்டும்  விட்டு வைக்கவில்லை.

சாப்பாடு எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், தண்ணீர் மட்டும் கிடையாது என்று உணவு பரிமாறும் ஊழியர்களின் குரல் மருத்துவமனை முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசம். தண்ணீருக்கு மட்டும் தான் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது.

மருத்துவமனை வெளியே உள்ள அம்மா உணவகம் அருகே டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து டேங்குகளில் தண்ணீர் நிரப்புகின்றனர்.

அந்த தண்ணீரை வாங்கிக் கொள்ளுமாறு மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை அறிவுறுத்துகின்றனர். அங்கு ஒரு பாட்டில் ரூ. 10 -க்கு விற்கின்றனர்.

தண்ணீரை பணம் கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு பலர் சிரமப்படுகின்றனர். இங்கு சிகிச்சைக்கு வருவோரில் பெரும்பாலோர் ஏழைகள். இவர்கள் படும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஊழியர்கள் கூறும்போது, ” மருத்துவமனையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கழிவறை களுக்கு பயன்படுத்த போதுமான தண்ணீர் இல்லை.

குடிநீரை நாங்கள் வீட்டில் இருந்துதான் கொண்டு வருகிறோம். ஏராளமான தொட்டிகளில் தண்ணீரை எடுத்து வைக்கிறோம். நோயாளிகள் மட்டும் அதனை பயன்படுத்துவதில்லை.

நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அந்த தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.

மருத்துவமனை உறவினரை சிகிச்சைக்கு அனுமதித்துள்ள ஒருவர் கூறும்போது, ” மருத்துவமனை வராண்டாவில் காற்றோட்டம் இல்லை. மின்விசிறியும் கிடையாது.

கோடை காலத்தில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க இடமின்றி மிகவும் கஷ்டப்பட்டோம். குடி தண்ணீருக்கு ரூ.200, உணவுக்கு ரூ. 300 என தினமும் செலவு செய்ய வேண்டியுள்ளது என்றார் வேதனையுடன்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி கூறும்போது, ” 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள 5 குடிநீர் தொட்டிகள் மருத்துவமனையில் உள்ளன.

தண்ணீர் நன்றாக இல்லை என்று கூறி நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் காசு கொடுத்து தண்ணீர் பாட்டில்களை வாங்கிக் கொள்கின்றனர்” என்றார்.