சென்னை:
டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று திரும்ப உள்ள பயணிகளை பரிசோதனை செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கொரோனா தொற்று இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா வந்த பக்தர்கள் ஆகியோரை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, அந்தந்த மாநில அரசுகளிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை சொந்த ஊர்களுக்கு ரயில்கள், பேருந்துகள் மூலம் அனுப்பி வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று ரயில் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வர உள்ளனர். இவர்களை பரிசோதனை செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களை பரிசோதனை செய்ய 2 டாக்டர்கள் மற்றும் சில மருந்தாளுநர்கள் தயாராக உள்ளனர்.
சென்னை வரும் பணிகளை, மருத்துவ குழுவினர் அனைவரும் முழுமையான பிபிஇ உடைகளுடன் சோதனை செய்ய உள்ளனர். டெல்லியில் இருந்து புலம்பெயர்ந்த பயணிகளை ஏற்றி வரும் ரயில் இன்று இரவு 11 மணிக்கு சென்னை வந்தடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.