பாசிகாட், அருணாசலப் பிரதேசம்

ருணாசலப் பிரதேசத்தில் முதல்வருக்கு தொடர்புடையவர்களின் கார்களில் ரூ.1.8 கோடி பிடிபட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. நாடெங்கும் கடும் வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இன்று பிரதமர் மோடி அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பாசிகோட் பகுதியில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பங்கு கொள்கிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா மோடியின் பேரணி நடக்க உள்ள பகுதியில் நடந்த தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் ரூ. 1.8 கோடி எடுத்து வந்த கார்கள் நேற்று இரவு பிடிபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த கார்கள் அனைத்தும் அம்மாநில முதல்வர் பேமா காண்டுவுக்கு தொடர்புடையவர்களின் கார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து சுர்ஜிவாலா, “உள்ளூர் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பாஜக கார்களில் ரொக்கப் பணம் எடுத்து வருவதாக புகார் அளித்தனர். அதை ஒட்டி இந்த கார்களில் வந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கார்கள் முதல்வர் வாகனத்தின் முன்னும் பின்னும் செல்லும் கார்கள் ஆகும்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அம்மாநில தேர்தல் அதிகாரி கலிங்க் தயேங், “நேற்று இரவு ரூ.1.8 கோடி ரொக்கம் சில கார்களில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்த சரியான தகவல் இதுவரை வரவில்லை. காவல்துறை சூப்பிரண்ட் மற்றும் உதவி ஆணையர் பிரதமரின் தேர்தல் பேரணி வேலைகளில் உள்ளனர். அதனால் இன்னும் அது குறித்து அறிக்கைகள் வரவில்லை. இன்று மாலைக்குள் இது குறித்த விரிவான செய்திகள் அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.