தஞ்சை:
நூறு நாள் வேலை திட்டத்தில் சம்பளம் கிடைக்காமல் வயதான பெண்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு கீழதீர்பந்துருத்தி கிராமத்தில் இந்த காட்சியை காணமுடிந்தது. தஞ்சையில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் உள்ள இந்த பகுதியில் வீடு, நிலம் இல்லாத பெண்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கிய பெண்களே அதிகளவில் பணிபுரிகின்றனர்.
காவிரி டெல்டாவில் பகுதியில் உள்ள இந்த பகுதி வறட்சியால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக காவிரியில் நீர் இல்லாதது, மழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சி போன்ற காரணத்தால் விவசாய மக்கள் வருவாய் இழந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாகவே விவசாயம் பொய்த்ததால் கிராம வாசிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டதை தேடி சென்றுள்ளனர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள் வேலை தேடி தஞ்சை நகரம், கோவை, திருப்பூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு சென்றுவிட்டனர்.
அங்கு பணியாற்றிய ஒரு பெண் கூறுகையில், ‘‘ விவசாயம் பொய்த்ததால் நூறு நாள் வேலை திட்டம் தான் கைகொடுக்கிறது. ஆனால் அங்கு வேலை செய்தும் கைக்கு பணம் வரவில்லை. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாநில அரசு உயர்த்தியுள்ளது. எனினும் இந்த திட்டத்தை 100 நாள் வேலை திட்டம் என்று தான் அழைக்கப்படுகிறது’’ என்றார்.
பின்னர் விசாரித்த போது, கடந்த 2 முதல் 3 மாதங்கள் வரை மாநில அரசு சம்பளம் வழங்கவில்லை என்பது தெரியவந்தது. இந்த தொகை ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி வழங்காத காரணத்தால் தான் சம்பளம் வழங்கவில்லை என்று மாநில அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தமிழகம் ஸ்தம்பித்து கிடக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
விவசாயமும் பொய்த்ததால் வயதான பெண்கள் நூறு நாள் வேலை திட்டத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் சம்பளம் கிடைக்காததால் அவர்களின் வாழ்வாதாரம் பொய்த்துபோயுள்ளது.