டெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 மில்லியன் பேர் பாம்பு கடிக்கும், 58 ஆயிரம் பேர் உயிரிழந்தும் வருவதாகவும், உலக நாடுகளிலேயே பாம்பு கடிக்கு ஆளாவதில் இந்தியா முதலிடம் வகிப்பதாகவும், தேசிய இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வளரும் நாடுகளில் பாம்பு கடிக்கு ஆளானவர்கள் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகவும், அவர்களின் உடல்களில் சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும், பார்வை குறைபாடு, சிறுநீரக சிக்கல்கள் மற்றும் உளவியல் துயரம் போன்ற நீண்டகால சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள ஆய்வு தகவலில், உலக அளவில் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதுபோல உலகளாவிய பாம்புக்கடி இறப்புகளில் கிட்டத்தட்ட 50% இந்தியாவில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
பாம்புக்கடிக்கு, பெரும்பாலும் விவசாயிகள், தொழிலாளர்கள், வேட்டைக்காரர்கள், மேய்ப்பர்கள், பாம்புகளை மீட்பவர்கள், பழங்குடியினர் மற்றும் புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் உள்ளவர்கள் ஆளாகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு காரணம், மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமை, பாம்புக் கடியைத் தடுப்பது பற்றிய போதிய அறிவு மற்றும் சமூகத்தில் முதலுதவி இல்லாதது, மற்றும் புற சுகாதாரப் பணியாளர்கள், உயிர்காக்கும் சிகிச்சையைப் பெறுவதில் தாமதம், மற்றும் பாம்புக் கடி மேலாண்மைக்கு பயிற்சி பெற்ற மருத்துவ அதிகாரிகள் இல்லாதது போன்றவைகளால், பாம்புகடியால் ஏற்படும் இறப்புகளை அதிகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளன.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.4 மில்லியன் (54 லட்சம்) பேர் பாம்பிடம் கடிபடுகின்றனர். அதில், 81,410 முதல் 1,37,880 இறப்புகளும் ஏற்படுகின்றன. இந்தியாவில், கடந்த 2000 ஆண்டு முதல் முதல் 2019 வரை 1.2 மில்லியன் (12 லட்சம்) பாம்புக்கடி இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இது சராசரியாக ஆண்டுக்கு 58,000 ஆகும். இது உலகிலேயே அதிகமான அளவு என்றும் தெரிவித்து உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான கணக்கெடுப்பின்படி, கடந்த ஒரு ஆண்டில் பாம்பு கடித்து இறந்தவர்களில் 94 சதவீதம் பேர் இந்திய கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். அதிகபட்ச உயிரிழப்பு உ.பி. மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மேலும், பீகார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் பாம்பு கடியில் முன்னிலையில் உள்ளன.
இந்தியாவில் பாம்புகடியால் ஏற்படும் இழப்புகளில் 70சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ள 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அதிகபட்சமாக உ.பி. மாநிலத்தில் 8,700 பேர் உயிரிழந்தனர். அதற்கடுத்ததாக ஆந்திராவில் 5,200 பேர், பீகாரில் 4,500 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030 க்குள் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்பு மற்றும் இயலாமையை பாதியாகக் குறைக்கும் நோக்கத்துடன் WHO தனது சாலை வரைபடத்தை அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.