நெட்டிசன்
P Rajendran முகநூல் பதிவு…
ஜோதிட பிதாமகன் நெல்லை வசந்தன் மறைவு!
ஜோதிட பிதாமகன் என்று அனைவராலும் அழைக்கப்படும் நெல்லை க.வசந்தன், 6-1-2022அன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி, அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி என்ற ஊரில் 15.10.1954 அன்று, கந்தசாமி – ஆவுடையம்மாள் தம்பதிக்கு ஒரே மகனாக பிறந்தார்.இவரது மனைவியின் பெயர் மீனா. ஒரு மகனும் மகளும் உள்ளனர். யாரிடமும் மாணவராக இல்லாமல், அனைத்தையும் தாமே கண்டறிந்து, ஆய்வு செய்து, ஜோதிட உலகில் அனைவராலும் பிதாமகன் என்று போற்றும் அளவுக்கு உயர்ந்தவர்.
இவருடைய ஆய்வுகள் பலவும், இந்திய பல்கலை கழகங்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களாலும் போற்றப்பட்டவை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு ஜாதகத்தை பார்த்து, அவரோடு சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை துல்லியமாக சொல்வது என்று புதிய முறையை அறிமுகப்படுத்தியவர் இவரே.
ஜோதிடத்தில் பங்கு சந்தை, மருத்துவம், மரபணு என இவர் தொடாத சப்ஜெக்டே இல்லை. தனி மனிதர்கள் அல்லாது, உலக நாடுகளுக்கும், இந்தியாவுக்கும், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும், ஜோதிட ரீதியான ராசி மண்டலங் களை கண்டறிந்து வெளியிட்டவரும் இவரே.
ஜோதிடத்தில் மரபணு அறிவியலை புகுத்தி பல புதுமைகளை எப்போதோ செய்து முடித்தவர். உலகியல் ஜோதிடம் இவரது ஒப்பற்ற ஞானப்பெட்டகம். எந்தெந்த நாட்டில் எப்போதெல்லாம் இயற்கை சீற்றம் வரும் என்பது போன்ற தகவல் களை எல்லாம் துல்லியமாக சொல்லும் நுணுக்கம் கொண்டவர். ஊடகத்துறையில் இவருக்கு எண்ணற்ற நண்பர்கள் உண்டு. ஆனாலும், தவிர்க்க முடியாத வற்புறுத்தலுக்கு பின்னரே, அவர் ஊடக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.
உலகம் முழுவதும் எண்ணற்ற அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர், தொழில் மேதைகள் என இவரை தங்கள் வழிகாட்டியாக கொண்டவர்கள். வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் தொடங்கி, உலகப்புகழ் பெற்ற குஷ்வந்த் சிங் வரை இவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராட்டி உள்ளனர். ஜோதிடத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாத எனக்கு, வசந்தனை சந்தித்த பின்னர், அதைப்பற்றி யோசிக்க தூண்டுகிறது என்று, குஷ்வந்த் சிங் தன்னுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் சொல்வதெல்லாம் நடக்கிறதா? இல்லை நடப்பதை எல்லாம் இவர் சொல்கிறாரா? இவரிடம் ஏதேனும் மந்திர வித்தை இருக்கிறதா? என்றெல்லாம் யோசிக்கும் அளவுக்கு, சற்று முன் நடந்ததை கூட சர்வ சாதாரணமாக சொல்லி விடுவார்.
வசந்தனிடம் கிளைண்ட் ஆக வந்தவர்கள் பலரும் ஃபிரண்ட் ஆக மாறிப் போய்விடுவார்கள். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருவது போல, இவர் தன்னை தானே சரி செய்து கொண்டு, தன்னை நாடி வருபவர்களையும் சரி செய்து கொண்டே இருந்தார்.
கணியன் பூங்குன்றனார், வராக மிகிரர் வரிசையில் நெல்லை வசந்தனும் ஒருவர் என, இனி வருங்காலம் சொல்லும். சந்தித்த மனிதர்களை எல்லாம் சிந்திக்க வைத்த அவரது சிந்தனை இன்று ஓய்ந்தது. அவருக்கு நிகர் அவரே. அவரை சந்தித்தவர்கள் மட்டுமே இதன் உண்மையை அறிவார்கள். நெல்லை வசந்தன் ஒரு அவதார புருஷர். அவர் பூமி என்னும் கிரகத்திற்கு வந்து நம்மோடு சில காலம் வாழ்ந்து மீண்டும் வானுலகம் சென்றுள்ளார். அவரோடு பழகிய அனைவரும் பாக்கியசாலிகள்.
அவரோடு பழகிய காலங்கள் அனைத்தும் எனக்கு வசந்த காலமே. அவரை இழந்த காலங்கள் எப்போதுமே கசந்த காலமே. அவர் இறக்கவில்லை.. இறைவன் ஆகி இருக்கிறார். வணங்குவோம்..