லண்டன்:
“எனது சொத்துக்களை முடக்கியுள்ளதால் வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதில் எனக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்று 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு ஓடிவிட்ட தொழிலதிபர் மல்லையா தெரிவித்துள்ளார்.
பல்வேறு வங்கிகளில் வாங்கிய சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார் தொழிலதிபர் விஜய் மல்லையா. இதையடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான ரூ.1411 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.
download (1)
இந்த நிலையில் விஜய் மல்லையா விடுத்துள்ள அறிக்கை: “எனக்கு எதிராக ஒருதலைப்பட்சமான விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கியில் பெற்ற கடன் தொகையை நான் முறைகேடாகப் பயன்படுத்தவில்லை. எனக்கு வர்த்தக ரீதியில் இழப்பு ஏற்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருந்தேன். ஆனாலும் என்னை தலைமறைவுக் குற்றவாளி என அறிவிக்க நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது ஏன்?
இந்த விவகாரத்தில் சிபிஐ சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்திருப்பது வேதனை அளிக்கிறது. சிவில் வழக்கான இதை, கிரிமினல் நடவடிக்கைகளோடு இணைத்து விசாரணை நடக்கிறது. எனது சொத்துக்களை முடக்கியுள்ளதால் வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதில் எனக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடன் தொகையை ஒரே தவணையில் செலுத்த ஏதுவாக பேச்சு நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும்” என்று மல்லையா தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கும் என அறிந்து முன்னதாகவே  சில சொத்துக்களை  மல்லையா விற்பனை செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.