சென்னை: வருமானத்தை மீறி சொத்து  குவித்த வழக்கில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதும், ஆட்சியாளர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. இதனால், அவர்கள் வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு வந்தார்கள். அதன்படி, தற்போதைய திமுக அமைச்சர்கள் பலர் வழக்கில் இருந்து விடுதலை பெற்றிருந்தனர். இதை கண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கீழமை நீதிமன்ற உத்தரவுகள் குறித்து கடுமையாக விமர்சித்ததுடன்,  லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் நடவடிக்கை பச்சோந்தி போல இருப்பதாக கடுமையாக சாடினார்.

இதைத்தொடர்ந்து பல அமைச்சர்கள் தங்கள்மீதான  சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் மறு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின்போது, முறையான பதில்களை காவல்துறை தெரிவிக்காத நிலையில், கீழமை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது தெரிய வ்நதது. அதன்படி ஏற்கனவே அமைச்சர் துரைமுருகன், கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி, பொன்முடி என பலர் மீதான வழக்குகளை விசாரித்து, அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவு செய்யப்பட்டு, மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், 2006-2010 வரை அமைச்சராக இருந்தபோது ரூ.2.01 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றதால்  விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான,  அமைச்சர் ஐ.பெரியசாமி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து நீதிமன்றத்தால்   விடுவிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த  நிலையில், சென்னை  உயர்நீதிமன்றம்  அந்த உத்தரவை ரத்து செய்துஉத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து மறுவிசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.