சென்னை: வருமானத்தை மீறி அதிகமான சொத்துகுவித்துள்ளது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

ஏற்கனவே மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், தற்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2001 – 2006  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக  ஆட்சியில், அனிதா ராதாகிருஷ்ணன்  கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது,   வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 90 இலட்சம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. பின்னர் அரசியல் மாற்றங்களால், அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.  மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் திமுக தலைமை அவருக்கு   மீன்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கிஉள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, வருமானத்துக்குமீறிய சொத்து சேர்த்து தொடர்பாக நேரில் ஆஜராகி  இந்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அவருடைய குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட  மொத்தம் 7 பேருக்கு  சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ம் வரை 7 நாட்கள் தனித்தனியாக விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.