சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சுந்தர் திடீரென விலகுவதாக அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக அமைச்சர்கள் பலர்மீது சொத்துக்குவிப்பு வழக்கள் உள்ளன. இந்த வழக்குகளை கீழமை விசாரித்த மாவட்ட நீதிமன்றங்கள் அமைச்சர்களை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டன. இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை மீண்டும் விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்தை மீறி சொத்து சேர்த்தாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக 2 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும் அவரது சொத்துகளையும் கடந்த ஆண்டு முடக்கியது. அதன் பின்னர் சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் 2022 டிசம்பர் மாதம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை விசாரித்து வந்த எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இருந்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விலகுவதாக அறிவித்து உள்ளார்.
தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற்று, வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அறிவுறுத்தியுள்ளார்.