தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் கடந்த 25-ம் தேதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மேலும், ஜூன் 3-ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என தற்காலிக சபாநாயகர் செம்மலை அறிவித்தார்.
போட்டியிட விரும்புவோர் இதற்கான வேட்பு மனுவை சட்டசபை செயலாளரிடம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை ஜூன் 2-ந் தேதி பகல் 12 மணிக்குள் சட்டசபை செயலாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், இதுசம்பந்தமாக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பப்படும் என்றும் செம்மலை தெரிவித்தார்.
இந்த நிலையில் சபாநாயகர் பதவிக்கு ப.தனபாலையும், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமனையும் வேட்பாளர்களாக ஆளும் கட்சியான அ.தி.மு.க. அறிவித்தது. அவர்கள் இருவரும் இன்று சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.
நாளை (3-ம்தேதி) காலை 10 மணிக்கு சட்டசபை கூடும்போது சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளுக்காக எத்தனை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றி தற்காலிக சபாநாயகர் செம்மலை அறிவிப்பார். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்திருந்தால் தேர்தல் நடத்தப்படும்.
இன்று மதியம் வரை அ.தி.மு.க. தவிர வேறு எந்த கட்சி சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.