சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்களின் பட்டியலில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் முதல்வர் ஓ.பி்.எஸ் பெயர்  இடம்பெற்றுள்ளது. இதனால் இபிஎஸ் தரப்பினர் 61 பேர் அவையை புறக்கணித்தனர். ஒபிஎஸ் உள்பட அவரது அதரவாளர்கள் 4 பேர் மட்டுமே பங்கேற்றார்.

தமிழக சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.  முன்னதாக, கடந்த  ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை பட்ஜெட் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்றது.

இதையடுத்து, இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இன்றைய கூட்டத்தொடரில்,  சபாநாயகர் அப்பாவு மறைந்த   முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. தொடர்ந்து, இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் திரு எஸ்.சாமிவேலு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் மறைவுக்கும்  இரங்கல் தெரிவிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இரங்கல் குறிப்பை  சபாநாயகர் வாசித்தார் .

இதையடுத்து சபையை எத்தனை நாள் கூட்ட வேண்டும் என்பது தொடர்பான சட்டமன்ற அலுவலர் ஆய்வு குழு கூடி நடைபெற்றது. இன்றைய அவை கூட்டத்தை எடப்பாடி தரப்பினர் புறக்கணித்த நிலையில் ஓபிஎஸ் பங்கேற்றார்.

இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்களின் பட்டியலில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் முதல்வர் ஓ.பி்.எஸ் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதிமுகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக,  இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இருக்கைகள் தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் எழுதி நிலையில், அதை இதுவரை பரிசீலிக்காத சபாநாயகர், அலுவல் ஆய்வுக்குழு பெயர் பட்டியலில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என ஓபிஎஸ் பெயரையும் சேர்த்துள்ளார்.

ஓ.பி.எஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, எடப்பாடி தலைமையிலான அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக சபாநாயகருக்குகடிதம் எழுதி,  எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதய குமாரை அறிவிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அதை சபாநாயகர் ஏற்கவில்லை என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் திமுகவுக்கு 125 இடங்களும்  கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்க 18 இடங்களும், மற்ற கட்சிகளக்கு 26 இடங்களும் உள்ளன. அதிமுகவுக்கு மட்டுமே 65 இடங்கள் உள்ளன. இதில் எடப்படி ஓபிஎஸ் என இரு பிரிவாகளாக பிரிந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு 61 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளன. ஆனால், ஓபிஎஸ்-க்கு அவரையும் சேர்த்து 4 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில், சபாநாயகர் ஒபிஎஸ்தரப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது அது மேலும் நிரூபணமாகி உள்ளது.