சென்னை: சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வுகுழு கூட்டத்தில்  அக்டோபர் 19ம் தேதி வரை 2 நாட்கள் மட்டுமே  சட்டப்பேரவை  நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அவை கூடியதும், எலிசபெத் ராணி, உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், அஞ்சலை பொன்னுசாமி, சிபிஎம் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கும், முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம், கோவை தங்கம், ஹக்கீம், அமீது இப்ராகிம், வீரப்பன், ராஜா, பச்சையப்பன், புருஷோத்தமன், ஜனார்த்தனன், திருவேங்கடம் உள்ளிட்டோருக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய சபை நடவடிக்கைகளில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. ஆனால், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்திருந்தார். இதன்பின், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து  சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.   இந்த ஆய்வு கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் கொறடா எஸ்.பி.வேலுமணி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் மட்டும் பங்கேற்றார். மற்ற கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்த ஆய்வு குழு கூட்டத்தில்,   அக்டோபர் 19ம் தேதி வரை சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 19ம் தேதி வரை 2 நாட்களுக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது.

இதை சபாநாயகர் அவையில் அறிவித்தார். தொடர்ந்து, நாளையும், நாளை மறுதினமும் நடைபெற உள்ள கூட்டத் தொடரில்,   2022-23-ஆம் ஆண்டுக்கான கூடுதல் வரவு, செலவு திட்டம் தாக்கல் , இந்தி திணிப்பு போராட்டம் தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.