சென்னை: பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன் அனைவரின் இதயங்களையும் கவர்ந்தவர் என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் புகழாரம் சூட்டினார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றுமுதல் மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. முதல்நாளான இன்று நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.
முன்னதாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேரவையில் 50 ஆண்டு காலம் நிறைவுசெய்யும் அமைச்சர் துரைமுருகனைப் பாராட்டி சிறப்புத் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மாற்று எதிர்க்கட்சி தலைவர்கள் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓபிஎஸ் பேசும்போது, “சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள் என்பது நீண்ட நெடிய வரலாறு. ஒருமுறை இருமுறை அல்ல பத்துமுறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் துரைமுருகன். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லாமல் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டக்கூடிய ஒரு உயர்ந்த உள்ளத்திற்குச் சொந்தக்காரர்தான் துரைமுருகன். எல்லோரிடத்திலும் பற்றுடனும் பாசத்துடன் பேசக்கூடியவர்.
எம்ஜிஆரிடத்தில் அன்பும், பற்றும் கொண்டவர், கருணாநிதியிடத்தில் விசுவாசம் மிக்கவர். சட்டப்பேரவையில் வாதங்கள் வரும்போது சூடாகவும், அடுத்த விநாடியே இனிமையாகவும் பேசும் ஆற்றல் கொண்டவர். அனைத்து ஆற்றல்களும் கொண்ட துரைமுருகனுக்கு அதிமுகவின் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.