சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் பாராளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்க மாநில தேர்தல்கள் நடைபெற உள்ளது. பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக 5 மாநிலங்களிலும் தேர்தல் களைகட்டியுள்ளது. அரசியல் கட்சிகள், கூட்டணி, தொகுதிப்பங்கீடு என விறுவிறுப்பான உள்ளனர். தேர்தல் பிரசாரங்களும் நடைபெற்று வருகின்றன. மாநில கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி வரும் 8ந்தேதி தொடங்குகிறது. சுமார் 1 மாத காலம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரானது ஏப்ரல் 8ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த காலக்கட்டத்தின்போது, 5 மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால், மாநில கட்சிகளின் எம்.பி.க்கள், பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்குபெற முடியாத நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில், கோவை நாடாளுமன்ற தொகு உறுப்பினரான கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன், சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் மூலம், நாடாளுமன்ற கூட்டத்தொடரை தள்ளி வைக்குமாறு வலியுறுத்தி உள்ளார். அவரது கடிதத்தில், 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் , நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துவது பொருத்தமாக இருக்காது. தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டிய தேவை உள்ளதால் அதற்கேற்ப நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.