சிம்லா,
இமாச்சல பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி 3 நாட்கள் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இமாச்சல பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7ந்தேதி முடிவடைகிறது. இந்நிலையில், கடந்த 12ந்தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அச்சல்குமார் ஜோதி சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 9ந்தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 18ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் கூறினார்.
இமாச்சல பிரதேசத்தில் தற்போது வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 68 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
இதன் காரணமாக அகில இந்திய காங்கிரஸ் சார்பாக தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. இதில், 58 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வீரபத்ர சிங் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் பாஜக 68 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் அதிரடியாக வெளியிட்டுள்ளது.
முதலமைச்சராக இரு முறை பதவி வகித்த பிரேம் குமார் துமால் அல்லது மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோரை களமிறக்க பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் பாரதியஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வருகிற 2-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். 2, 4, மற்றும் 5-ந்தேதிகளில் அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.