சென்னை:
டப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளை பெற்ற தேமுதிக, 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றது. அதன் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. தற்போது தமிழக அரசியல் கட்சிகள் 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் அதிமுகவில் இன்னும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணி நீடிக்கும் என்று அதிமுக சொல்லி வருகிறது. ஆனால் கூட்டணியில் உள்ள கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது.

இந்தநிலையில் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று சொன்ன அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா விடுதலை நாளான இன்று அதிமுக பலமாக இருப்பதைக் காட்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெ.நினைவிடத்தை திறந்து வைத்தார். இதற்காக கட்சியினரை தமிழகம் முழுவதிலிருந்தும் திரட்டியது அதிமுக.

ஆனால் கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை. அதிமுகவினரால் முதல்வராக தேர்வானவர். சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும். ஒரு பெண்ணாக அவருக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. ஜெயலலிதாவுடன் இருந்து அனைத்தையும் செய்தவர் சசிகலா. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். கடந்த 2011ல் 41 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது என தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பொருளாளர், மக்களால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவில்லை என்று பேசியதும், சசிகலாவை ஆதரித்து பேசியதும் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.