சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசாக, ரூ.2000 உடன் பொங்கல் தொகுப்பு கொண்ட பையை வழங்குவது குறித்து தமிழகஅரசு ஆலோசனை செய்து வருவதாக கோட்டை வட்டாரத்தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனால், அதற்கு காரணமாக, கொரோனா முடக்கம் மற்றும் நிவர், புரெவி புயல் பாதிப்பை காரணமாக சொல்ல ஆளும் கட்சி தீர்மானித்து உள்ளதாகவும், ஆனால், இந்த இலவசமானது, இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே, வாக்காளர்களை கவரும் வகையில், வழங்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. மேலும் கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்தும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களை புரட்டிப்போட்ட நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகளை கருத்தில்கொண்டு, மக்களை கவரும் வகையில், குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.2 ஆயிரம் கொடுக்க தமிழகஅரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த தொகையை, மழை வெள்ள பாதிப்புக்கான நிவாரணமாக தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் குடும்பங்களுக்கு வழங்க, திட்டமிட்டுள்ளதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக பொங்கல் பண்டிகையின்போது, தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா 1,000 ரூபாய் ரொக்கம் உடன் தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இதற்காக, 2,250 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இத்துடன் மேலும் ரூ.1000 சேர்த்து ரூ.2000ஆக கொடுத்து மக்களை கவர அதிமுக அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா பொதுமுடக்கத்தின்போது, மக்கள் வீடுகளில் முடங்கியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம், அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் பல மாதங்கள், அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை, இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் கொரோனா தொற்று அதிகம் பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் மதுரை மாவட்டங்களில் மீண்டும் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, ‘நிவர், புரெவி’ புயல்களால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. ‘மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணமாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் தமிழகஅரசை வலியுறுத்தி வருகின்றன.
இதையெல்லாம் மனதில்கொண்டு, தமிழக சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களின் வாக்குகளை கவர்ந்து, தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தில், அதிமுக அரசு, பொங்கல் பண்டிகைக்கு, பொங்கல் பரிசாக, 2,000 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகத்தான், சர்க்கரை கார்டுதாரர்கள், சாதாரண கார்டுகளாக மாற்ற மேலும் அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ள நிலையில், மத்தியஅரசு வழங்க இருக்கும் கொரோனா நிவாரண நிதியைக்கொண்டு, தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த எடப்பாடி அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.