கவுகாத்தி: குடும்பத்தை சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட வாக்குகளும் உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு கேட்டு படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

அசாம் மாநில சட்டபேரவை முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளதால், நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. அசாமின் சோனிட்பூர் மாவட்டம் போலோகுரியில் நேபாளி காவ்ன் இனமக்கள் வசிக்கின்றனர். சுமார் 300 குடும்பங்களில் 2,500 பேர் கிராமத்தில் வசிக்கின்றனர்.

இக்கிராமத்தை சேர்ந்த மறைந்த ரான் பகதூர் தாபாவுக்கு 12 மகன்களும், 10 மகள்களும், 150 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவரது ஒரு குடும்பத்தில் மட்டும் 1,200க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. அதனால், ரங்காபாரா தொகுதியில் பகதூர் தாபாவின் குடும்ப வாக்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளதால், வேட்பாளர்கள் இவர்களது குடும்பத்தை குறிவைத்து  வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து நேபாளி காவ்ன் கிராமத் தலைவர் சார்கி தாபா கூறுகையில், கடந்த 1997ம் ஆண்டு அதாவது எங்களின் தந்தைக்கு 116 வயது இருக்கும் போது இறந்தார். 1906ம் ஆண்டில் நேபாளத்திலிருந்து அசாம்  குடிபெயர்ந்தோம். தந்தைக்கு ஐந்து மனைவிகள் இருந்தனர். அவர்களுக்கு 12 மகன்களும், 10 பெண் குழந்தைகளும் பிறந்தன.

அவரது பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப் பேரப்பிள்ளைகளுடன், பகதூர் குடும்பத்தில் 2,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளோம். மருமகன்கள், மருமகள்கள், அவர்களுடைய குழந்தைகள் பெயர்கள் எல்லாம் எனக்கு நினைவில் இல்லை.

ஆனால், ரங்காபாரா தொகுதியின் தலைவிதியை முடிவு செய்ய எங்களின்  குடும்பத்தை சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட வாக்குகளே போதும். நாங்கள் ஒரே குடும்பமாக இருந்தாலும், யாருக்கு வாக்களிப்பது என்பது அவரவர் முடிவுக்கு விட்டுவிட்டோம். வரும் 27ம் தேதி நடக்கும் முதல்கட்ட தேர்தலில் எங்கள் குடும்பத்தினர் வாக்களிப்பார்கள் என்றார்.