செயற்கை கருவூட்டல் மூலம் பசுக்களை மட்டுமே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இதனை அறிவித்த முதல்வர், இதன் மூலம் பால் உற்பத்தி பெருகும் என்றும், அடிமாடாகவும், கறிக்கு மட்டுமே உபயோகப்படும் காளை மாடுகளின் எண்ணிக்கை இன்னும் 20 ஆண்டுகளில் அருகிப்போய் பசுமாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மாட்டின இனவிருத்தி திட்டத்தின் மூலம் பெண் இனத்தை உருவாக்கக்கூடிய விந்தணுக்களை மட்டுமே பிரித்து எடுத்து, பசுக்களுக்கு செலுத்துவதன் மூலம் பசுங்கன்றுகளை மட்டுமே அபிவிருத்தி செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும், தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து கோ சாலைகளில் வைத்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர்.

“இதிகாச காலங்களில், கோமாதா என்று பசு மாடு போற்றப்பட்டதும், வற்றாத செல்வத்தை வாரி வழங்கியதும் சொல்லப்பட்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது, அக்காலங்களில் காளை மாடுகளை விட பசு இன விருத்திக்காக மக்கள் சில வழிமுறைகளை கையாண்டுள்ளதும் பசுக்களை மட்டுமே போற்றிப் பாதுகாத்தும் புலப்படுகிறது” என்று கூறி அனைவரையும் சிலிர்க்கவைத்தார்.

ஏற்கனவே, இயற்கையாக இல்லாமல் ஊசி மூலம் இனவிருத்தி செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒரு காளை மாட்டின் விந்தணு மூலம் 200 பசுக்களை சினையாக்கி கொண்டிருக்கும் நிலையில் அசாம் முதல்வரின் இந்த புதிய அறிவிப்பு மாட்டின ஆர்வலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.