பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான மெகா ஃபுட் பார்க் என்ற இடம் அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூரில் உள்ளது. இங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த மெகா குழியில் கடந்த புதன்கிழமை இரவு நேரத்தில் வந்த 3 யானைகள் ஒன்றின்பின் ஒன்றாக விழுந்தன. இதில் கடுமையாக காயம்பட்ட பெண் யானை இறந்தது. இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

elephants

அந்தப் பகுதியில் அதிகாலை நேரத்தில் கூட்டமாக சென்று கொண்டிருந்த யானைகளில் இந்த முன்று யானைகளும் வழிதப்பி உள்ளே வந்திருக்கின்றன. இங்கு பதஞ்சலி நிறுவனம் வெட்டி வைத்திருந்த 10 அடி குழிக்குள் குட்டியானை முதலாவது குழிக்குள் விழுந்திருக்கிறது. அதைக்கண்ட அதை காப்பற்றப்போன தாய் யானையும், அதைத் தொடர்ந்து ஆண் யானையும் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்திருக்கின்றன. ஆண் யானை எப்படியோ போராடி வெளியே வந்துவிட்டது. தன் மீது ஆண் யானை விழுந்ததால் அதிகம் காயப்பட்ட பெண் யானை குழிக்குள் வலியால் துடித்துக்கொண்டு இருந்திருக்கிறது.

விஷயமறிந்த காட்டு இலாக்கா அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு குழிக்குள் கிடந்த இரு யானைகளையும் மீட்டனர். தாய் யானைக்கும், யானைக்குட்டிக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதிகப்படியான இரத்தப்போக்கு இருந்ததால் துரதிருஷ்டவசமாக தாய் யானை இறந்தது.

தகவலறிந்த அஸ்ஸாம் வனத்துறை அமைச்சர் பிரமிளா ராணி பிரம்மா, இது யானைகள் உலவும் பகுதி என தெரிந்தும் அலட்சியமாக குழி வெட்டி வைத்த பதஞ்சலி நிறுவனத்தின்மீது வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிட்டார்.

baba_ramdev

இதற்கு பதஞ்சலி நிறுவனத்தின் சார்பாக பதிலளித்த உதயாதித்ய கோஸ்வாமி இது பொதுவாக யானைகள் உலவும் பகுதி அல்ல, ஆனால் அறுவடை காலங்களில் யானைகள் அருணாசல பிரதேசத்தில் இருந்து இங்கு வருவதுண்டு எனவேதான் விழிப்பாக இருக்க காவலுக்கு 6 நபர்களை வைத்துள்ளோம், அப்படியிருந்தும் அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டது. பதஞ்சலி நிறுவனம் விரைவில் அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள பகுதியில் யானைகளுக்கென்று பெரிய சரணாலயம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.